சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை சாவு
பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சரக்கு வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை இறந்தது.
வேன் மோதியது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் நேகாஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தை இருந்தனர். இவர்களில் குழந்தை நேகாஸ்ரீ நேற்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது.
அப்போது அப்பகுதியில் சரக்கு வேனில் வெங்காயம் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். இதனால் குழந்தை வேனின் கீழே குழந்தை நின்று கொண்டிருந்தது. வியாபாரத்தை முடித்து கொண்டு டிரைவர் வேனை எடுத்துள்ளார். அப்போது அருகில் நின்று இருந்த குழந்தையின் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை அலறியது.
குழந்தை சாவு
இதனால் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை நேகாஸ்ரீ நேற்று மாலை பரிதாபமாக இறந்தது.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். பவித்ராவின் கணவர் முனிரத்தினம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வேனில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.