சாக்கோட்டை அருகே-வெடிபொருள் வெடித்து படுகாயம் அடைந்த சிறுவன் சாவு
நாட்டு வெடி மருந்து பொருளில் தீப்பற்ற வைத்தபோது வெடித்து சிறுவன் பலியானார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பெத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீரசேகர். இவருடைய மனைவி சுபா. இவர்களுடைய மகன்கள் லட்சுதன் (வயது 11), ஹர்சன் (வயது 9). இவர்கள் இருவரும் புதுவயலில் உள்ள தனியார் பள்ளியில் 6 மற்றும் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் குளிக்க சென்றனர்.
வழியில் அதே ஊரை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான ஆள் இல்லாத வீட்டில் நாட்டு வெடி மருந்து தயாரிப்பதற்கான பொருள் கிடந்துள்ளது. இதை பார்த்த சிறுவர்கள் அதை எடுத்து விளையாட்டாக தீயை பற்ற வைத்துள்ளனர். அப்போது திடீரென அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அவர்கள் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவர்களை மீட்டு காரைக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சின்னத்தம்பியை கைது செய்தனர்.