கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.


கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
x

மடத்துக்குளம் அருகே குளிக்கச் சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருப்பூர்

மடத்துக்குளம் அருகே குளிக்கச் சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவன்

உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் சக்திகுமார் (வயது 16). இவர் உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க செல்ல முடிவு செய்தார்.

அதன்படி அவருடைய வகுப்புத் தோழர்களான மடத்துக்குளத்தை அடுத்த செங்கண்டிபுதூரைச் சேர்ந்த பிரசன்னா, ஆண்டியக்கவுண்டனூரைச் சேர்ந்த ராகுல், உடுமலை கணேஷ் நகரைச் சேர்ந்த தருண்குமார் ஆகியோருடன் மடத்துக்குளம் அருகே உள்ள ஜோத்தம்பட்டி பகுதிக்கு சென்றனர்.

கிணற்றில் மூழ்கி பலி

அங்கு செங்கண்டிபுதூரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் இறங்கி அவர்கள் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்திகுமார் கிணற்றில் மூழ்கினார். உடனடியாக நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சக்திகுமார் கிணற்று நீரில் மூழ்கினார்.

இதனையடுத்து சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்புத்துறையினர் மற்றும் கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சக்திகுமாரின் உடலைத்தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து 3 மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சக்திகுமாரின் உடலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் கடும் சோகத்தில் மூழ்கியது.


1 More update

Related Tags :
Next Story