மரத்தில் கார் மோதி சிறுமி பலி; 8 பேர் காயம்
திருச்சியில் இருந்து ேகாவை நோக்கி சென்ற கார் பொங்கலூர் அருகே சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இதில் 8 வயது சிறுமி பலியானாள். மேலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மரத்தில் மோதிய கார்
திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவரது தம்பி வேல்முருகன் (43). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவர்கள் தங்களது குடும்பத்தினர் 9 பேருடன் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு காரில் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊரிலிருந்து புறப்பட்டனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரை அடுத்த மில் காலனி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதியது.
சிறுமி பலி
இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ராஜேந்திரனின் மகள் கிருஷிகா அனு (8), வேல்முருகனின் மகன் யஸ்வின் (10) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 6 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக கிருஷிகா அனுவை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த யஸ்வினுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.