பாகலூர் அருகே வடமாநில தொழிலாளி திடீர் சாவு
ஓசூர்:
அசாம் மாநிலம் முகில்தன் மாவட்டத்தை சேர்ந்தவர் துதுமாணி நாத் (42). இவர் ஓசூர் அருகே உளியாளம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி இவரும், இவருடைய நண்பர்கள் 4 பேரும் அசாம் மாநிலத்தில் இருந்து உளியாளத்திற்கு வந்தனர். அங்கு அறையில் அவர்கள் தங்கினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை துதுமாணி நாத்தின் நண்பர்கள் வேலைக்கு சென்றனர். அவர் சமையல் செய்து வைத்து விட்டு வேலைக்கு வருவதாக கூறினார்.
இந்த நிலையில் மதியம் அவரது நண்பர்கள் அறைக்கு சென்றபோது துதுமாணி நாத் அறையில் உள்ள குளியல் அறையில் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். துதுமாணி நாத்திற்கு ஏற்கனவே காசநோய் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் குளியல் அறையில் மயங்கி விழுந்து காயமடைந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.