அதியமான்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
நல்லம்பள்ளி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சித்திரப்பட்டியை சேர்ந்த குருமூர்த்தி மகன் சசிகுமார் (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவ சிகிச்சை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சேலம் சென்றுவிட்டு நேற்று மீண்டும் பெங்களுருவுககு புறப்பட்டார்.
அப்போது தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை ஜங்சன் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான்கோட்டை போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.