வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு: தந்தையின் உடலை பூர்வீக வீட்டில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மகன் - உறவினர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே தூக்கி சென்றதால் பரபரப்பு


வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு: தந்தையின் உடலை பூர்வீக வீட்டில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மகன் - உறவினர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே தூக்கி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jun 2023 1:14 AM IST (Updated: 30 Jun 2023 12:41 PM IST)
t-max-icont-min-icon

வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த தந்தையின் உடலை பூர்வீக வீட்டில் வைக்க மகன் எதிர்ப்பு தெரிவித்தார். உறவினர்கள் வீட்டுக் கதவை உடைத்து உடலை வீட்டுக்குள் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

எடப்பாடி:

85 வயது முதியவர்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மந்தி கவுண்டர் (வயது 85). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மந்திகவுண்டர் பூர்வீக வீட்டை மகன் ராமு பெயருக்கு எழுதி கொடுத்தார். மீதம் இருந்த சொத்துக்களை மற்ற பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார்.

இதற்கிடையே ராமு, தன்னுடைய தந்தையை வீட்டில் இருக்க கூடாது என்று கூறி வெளியேற்றி விட்டார். இதனால் மந்தி கவுண்டர், எட்டிக்குட்டை மேடு பகுதியில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்தார்.

வீட்டுக்குள் கொண்டு செல்ல மறுப்பு

இந்த நிலையில் மந்திகவுண்டன் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக இறுதிசடங்கு காரியங்களை செய்வதற்காக மந்தி கவுண்டரை கரட்டூரில் உள்ள பூர்வீக வீட்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் தந்தையின் உடலை வீட்டுக்குள் அனுமதிக்க ராமு மறுத்து விட்டார். மேலும் வீட்டை வெளியில் பூட்டி விட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராமுவிடம் பேசி பார்த்தனர். அதற்கு ராமு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த உறவினர்கள், ராமுவின் வீட்டுக்கதவை உடைத்து மந்திகவுண்டர் உடலை பூர்வீக வீட்டுக்குள் வைத்தனர்.

கடும் நடவடிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த எடப்பாடி துணை தாசில்தார் சிவராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி வழங்கிய சிறப்பு உத்தரவை ராமுவிடம் வழங்கினர். மேலும் உதவி கலெக்டர் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். அதன்பிறகு மந்திகவுண்டர் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பெத்த மகனே தந்தையின் உடலை வீட்டுக்குள் வைக்க அனுமதி மறுத்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story