பலாப்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவு


பலாப்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவு
x

பலாப்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழந்தான். அவனது பெற்றோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கே.ஆலம்பாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பரணிதரன் (வயது 6). 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் வேல்முருகன் தனது மனைவி மற்றும் பரணிதரனுடன் பலாப்பழம் சாப்பிட்டார். பின்னர் குளிர்பானம் குடித்த அவர்கள், தயிர் சாதத்தையும் சாப்பிட்டு இருக்கிறார்கள். சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி ஏற்பட்டது.

சிறுவன் சாவு

இதையடுத்து 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதில் சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

பெற்றோருக்கு சிகிச்சை

சிறுவனின் பெற்றோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி வேல்முருகன் மருதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story