கடல் அலையில் சிக்கி செண்டை மேள கலைஞர் சாவு
வேளாங்கண்ணியில் கடல் அலையில் சிக்கி செண்டை மேள கலைஞர் உயிரிழந்தார். இவர் கல்லூரி சேர இருந்த நிலையில் இந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் கடல் அலையில் சிக்கி செண்டை மேள கலைஞர் உயிரிழந்தார். இவர் கல்லூரி சேர இருந்த நிலையில் இந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
கடல் அலை இழுத்து சென்றது
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நலேபள்ளி ஊராட்சியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருடைய மகன் ஜோதிஸ் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்த இவர், செண்டை மேளம் அடிக்கும் வேலைக்கு வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் செண்டை மேளம் அடிப்பதற்காக தனது நண்பர்களுடன் திருவாரூருக்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஜோதிசை கடலுக்குள் இழுத்து சென்றது.
உடல் கரை ஒதுங்கியது
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களுடன் கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் 2 மணி நேரத்திற்கு பிறகு ஜோதிஸ் உடல் கரை ஒதுங்கியது. உடனே கடலோர காவல் படை போலீசார் ஜோதிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.