எந்திரத்தில் அடிபட்டு வடமாநில வாலிபர் சாவு
கியாஸ் குழாய் பதிக்கும் போது எந்திரத்தில் அடிபட்டு வடமாநில வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருமத்தம்பட்டி, ஜூன்.14-
கியாஸ் குழாய் பதிக்கும் போது எந்திரத்தில் அடிபட்டு வடமாநில வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநில வாலிபர் சாவு
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் பேடியா (வயது 20). இவர் புதுச்சேரியை சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். சந்தோஷ் பேடியா கோவையில் மத்திய அரசின் கியாஸ் குழாய் பதிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சூலூர் முத்துக்கவுண்டன்புதூரில் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது. எந்திரம் மூலம் குழிக்குள் இறக்கிய குழாய்களை பதிக்கும் பணியில் சந்தோஷ்பேடியா ஈடுபட்டு இருந்தார். எந்திரத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த நுஜ்ருல் இஸ்லாம் (32) இயக்கினார். அதை மேற்பார்வையாளர் பிரவீன்குமார் (28) கண்காணித்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தின் ஒரு பகுதி சந்தோஷ்பேடியா மீது திடீரென்று தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
2 பேர் மீது வழக்கு
இது குறித்த புகாரின் பேரில் எந்திரத்தை இயக்கிய நுஜ்ருல்இஸ்லாம், மேற்பார்வையாளர் பிரவீன்குமார் ஆகியோர் மீது சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.