தனக்கு தானே கல்லறை கட்டி வைத்திருந்த மூதாட்டி சாவு

தனக்கு தானே கல்லறை கட்டி வைத்திருந்த மூதாட்டி இறந்தார். அவரது உடலுக்கு ஊர் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோசி (வயது 70). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். ஆரம்ப காலத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த இவர் பின்னர் சூழால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வந்தார்.
அத்துடன் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலைக்கு சென்று வந்தார். இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் 2 முறை பொன்னாடை அணிவித்து கவுரவித்து உள்ளார்.
ரோசி தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே தனது வீட்டின் பின்பகுதியில் கல்லறை கட்டி வைத்திருந்தார். அந்த கல்லறையை சுற்றிலும் மணி மண்டபமும் கட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ரோசி உடல் நலக்குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இறந்து கிடந்தார்
ஒரு வாரமாக ரோசி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது ரோசி இறந்து, உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு யாரும் கவனிக்காததால் அவர் இறந்தது தெரியவந்தது.
இதுபற்றி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து ரோசியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஊர் மக்கள் திரண்டு அஞ்சலி
அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு ரோசி தனக்காக கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது அடக்கம் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கேலி செய்ததால் உருவான கல்லறை
ரோசி வேலைக்கு செல்லும் இடங்களில் அவருடன் பணியாற்றியவர்கள், 'நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கிறார்கள்?' என கேட்டு கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய கல்லறையை கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தில் ஒரு அழகான கல்லறையை வடிவமைத்து கட்டினார். அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் கல்லறை கட்டப்பட்டிருந்தது.






