கட்சியின் முதன்மைச்செயலாளர் மரணம்: அரைக்கம்பத்தில் வி.சி.க. கொடிகள் -திருமாவளவன் அறிவிப்பு
கட்சியின் முதன்மைச்செயலாளர் மரணம்: அரைக்கம்பத்தில் வி.சி.க. கொடிகள் -திருமாவளவன் அறிவிப்பு.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச்செயலாளர் உஞ்சை அரசன் நேற்று மரணம் அடைந்தார். கடந்த 2-ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 3 வார காலமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இதயம் செயலிழந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான உஞ்சை விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை அங்கே அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி அடக்கம் செய்யப்படுகிறது. எனவே, கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உஞ்சை அரசன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.