கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல்


கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல்
x

பொள்ளாச்சியில் கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கருத்து வேறுபாடு

பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்த 33 வயது பெண் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணியகாரன் காலனியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பெண் கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மேலும் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

மனைவிக்கு கொலை மிரட்டல்

சம்பவத்தன்று பேராசிரியை கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் அந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது கணவர் வழிமறித்தாக தெரிகிறது. ஆனால் அந்தப் பெண் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அந்த பெண் மோதி விட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார், அந்த பெண்ணின் கணவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story