ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை குறித்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம்; விவசாயிகள் வெளிநடப்பு


ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை குறித்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம்; விவசாயிகள் வெளிநடப்பு
x

ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை அமைப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர்

விளக்க கூட்டம்

பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை மத்திய நெடுஞ்சாலைத்துறை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க உள்ளது. இந்த சாலை அமைத்தால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 16 கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று போகங்கள் விளையக்கூடிய நஞ்சை நிலங்கள், 13 ஏரிகள், 10 குளங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளி கட்டிடங்கள், கோவில்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம், தர்ணா, வீடுகள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 6 வழிச்சாலை அமைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.




இழப்பீடு தொகை

இதில் 6 வழிச்சாலை திட்ட இயக்குனர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் நடராஜ், சிறப்பு தாசில்தார் ஹரிகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சம்பத், செயலாளர் துளசி நாராயணன், ஊத்துக்கோட்டை தாலுகா நஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் குணசேகர்ரெட்டி, செயலாளர் சசிகுமார் ஆகியோரின் தலைமையில் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதை முன்னிட்டு திட்ட இயக்குனர் பிரசாந்த் பேசியபோது 6 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு 2016 வருடத்திய நிலவரப்படி இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என்றார்.

வாக்குவாதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேசும்போது, எங்களின் வாழ்வாதாரமாக உள்ள மூன்று போகங்கள் விளையக்கூடிய நிலங்களை 6 வழிச்சாலைக்கு வழங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினர்.

இதனால் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், வேறுவழியின்றி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.


Next Story