375 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான டெபிட் கார்டு
ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிக்கும் 375 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான டெபிட் கார்டு மற்றும் புதுமைப்பெண் பெட்டகத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிக்கும் 375 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான டெபிட் கார்டு மற்றும் புதுமைப்பெண் பெட்டகத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
புதுமைப்பெண் திட்டம்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்தம் நினைவு உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்ட துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க.க்கள். ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி செ.முருகேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கல்லூரி மாணவிகளுக்கு டெபிட் கார்டு மற்றும் புதுமைப்பெண் பெட்டகத்தை வழங்கினார். மொத்தம் 375 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான டெபிட் கார்டு மற்றும் புதுமைப்பெண் பெட்டகத்தினை அமைச்சர் வழங்கினார்.
மாதம் ரூ.1000
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுத்தி உள்ளார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழில் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
கூடுதலாக உதவி
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். எனவே மாணவிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கவிதாகதிரேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.