பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்


பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
x

வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு வடக்கன்குளத்துக்கு திரும்பிய வாலிபர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு வடக்கன்குளத்துக்கு திரும்பிய வாலிபர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வேலை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மைக்கேல் ஜார்ஜ் பிரபு (வயது 39). இவருடைய மனைவி மேரி அஸ்வதி (33). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மைக்கேல் ஜார்ஜ் பிரபு வெளிநாட்டில் வேலைபார்த்து வநதார். கடந்த ஜூன் மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வீட்டில் இருந்து வந்தார்.

போலீசில் புகார்

இந்தநிலையில் மேரி அஸ்வதி நாகர்கோவில் ராம அச்சன்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு மட்டும் இருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் வடக்கன்குளம் பகுதியில் நடமாடிய அவரை திடீரென காணவில்லை. வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பூட்டிய வீட்டில் பிணம்

இந்தநிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வீட்டு பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் அங்கு விரைந்து வந்து மைக்கேல் ஜார்ஜ் பிரபு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு உடல் அழுகி உருக்குலைந்த நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு பிணம் கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மைக்கேல் ஜார்ஜ் பிரபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

மோப்ப நாய்

சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் அஜீகுமார் ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரித்தனர். நெல்லை தடயவியல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான குழுவினர் வந்து ஆய்வு செய்தனர். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு சொந்த ஊருக்கு வந்தவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story