இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: நூலக ஊழியர் கற்பழிப்பு வழக்கில் கைது


இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: நூலக ஊழியர் கற்பழிப்பு வழக்கில் கைது
x

சென்னையில் இளம்பெண்ணை காதலித்து, உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நூலக ஊழியர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் பிடிபட்டார்.

சென்னை,

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் ஊழியராக வேலை செய்தவர் மணி அரசு (வயது 29). இவர் மீது இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், மணி அரசு என்னை காதலிப்பதாக கூறி அன்பாக பழகினார். என்னை திருமணம் செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தார். அதை உண்மை என்று நம்பி அவருடன் நெருக்கமாக பழகினேன். இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அதன் பலனாக இருமுறை நான் கர்ப்பம் அடைந்தேன். அவரது வற்புறுத்தலின்பேரில் இரண்டு முறையும் நான் கருவை கலைத்தேன். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது சொந்த ஊரான திருச்சி துறையூரில் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.

கற்பழிப்பு வழக்கில் கைது

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே மணி அரசு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு, மணி அரசு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அதன்பேரில் அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.


Next Story