கொரோனா பரிசோதனையை தினசரி 11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு
கொரோனா பரிசோதனையை தினசரி 11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு
கோவை
தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை 11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 5-ந் தேதி 4 ஆயிரத்தை தாண்டியும், 6-ந் தேதி 5 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.
காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று கொரோனா தடுப்பு முறைகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இதில், தமிழ்நாடு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒத்திகை நிகழ்ச்சி
ஆலோசனை கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 6-ந்தேதி நிலவரப்படி கொரோனாவுக்கு 273 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அப்போது அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளன. மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்வார்கள். பொதுசுகாதார துறை அமைப்பின் மூலம் கொரோனா குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 1,000 படுக்கைகளும், அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர 24,061 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், 2,067 மெட்ரிக் டன் அளவுக்்கு ஆக்சிஜன் சேமிப்பு வசதி உள்ளது. மேலும் 100 சதவீதம் மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
தமிழகத்தில் தற்போது தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று (நேற்று) நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தினர்.
இதையடுத்து, தமிழகத்தில் சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அச்சப்பட தேவையில்லை
மேலும், தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. எனவே, பொது மக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்த திருப்பூரை சேர்ந்தவருக்கு இணை நோய் பாதிப்பு இருந்தது. இதனால் அவர் உயிரிழந்தார்.
நாட்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இதய நோயாளிகள் ஆகியோர் பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த 1-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2-ந் தேதி ஆய்வு செய்த போது அங்கு 100 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
வீடுகளில் நோட்டீஸ்
கொரோனா பாதித்தவர்கள் 5-6 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். அவர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சர்வதேச விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். அதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக- கேரளா எல்லை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்படும். சிறப்பு முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.