புலி நடமாட்டத்தை அதிநவீன கேமரா மூலம் கண்காணிக்க முடிவு
பேச்சிப்பாறை அருகே புலி நடமாட்டத்தை அதிநவீன கேமரா மூலம் கண்காணிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே புலி நடமாட்டத்தை அதிநவீன கேமரா மூலம் கண்காணிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
புலி நடமாட்டம்
பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் குடியிருப்பு உள்ளிட்ட 4 குடியிருப்புகளில் கடந்த 3-ந் தேதி முதல் புலி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆடுகள், மாடு, நாயை கடித்துக் கொன்று புலி வேட்டையாடியது. இதனால் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கூண்டுகள் வைத்து பார்த்ததில் அதில் புலி சிக்கவில்லை. மேலும் டிரோன் கேமரா மூலம் மூலம் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஒருவாரமாக குடியிருப்பு பகுதியில் புலியின் நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஒருவாரமாக இல்லை
மேலும் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-
புலியை பிடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2 நாட்களாக டிரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு காட்டுக்குள் புலியின் இருப்பிடம் அல்லது அதன் நடமாட்டத்தை கண்டறிய முயற்சித்தோம். இதில் குறிப்பிடத்தக்க அளவில் பலன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் இரவு நேரத்தில் அடர் காட்டை ஊடுருவி ஸ்கேன் செய்யும் அதிநவீன தெர்மல் கேமராவை பயன்படுத்தவுள்ளோம்.
தற்போது காட்டில் வனத்துறையினரின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் புலி அதனை உணர்ந்து கொண்டு வெளியே வராமல் உள்ளது என்றும் கருத வேண்டியுள்ளது. கடந்த ஒருவாரமாக புலியின் நகர்வுகள் மிகக்குறைவாக உள்ளன. கால் தடங்கள் அதிகமாக பதிவாகவில்லை. எனவே புலியை கூண்டில் சிக்க வைக்கும் பணிகளை தொடர்ந்து செய்வதுடன், வனத்துறையினர் காட்டுக்குள் நடமாடுவதை சில நாட்கள் நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளோம். மேலும் குடியிருப்பு மக்களின் கால்நடைகளை இங்கு காலியாகக் கிடக்கும் அலுவலர் குடியிருப்புகளுக்குள் இரவு நேரம் கட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.