3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கோவிலை திறக்க முடிவு


3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கோவிலை திறக்க முடிவு
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 10:08 AM GMT)

குடவாசல் அருகே இருதரப்பினர் மோதலால் 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டதால் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

திருவாரூர்

அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

குடவாசல் அருகே உள்ள செம்பியன்கூந்தலூரில் ரேணுகா காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்த கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று முன்தினம் குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் தேவகி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இருதரப்பினரும் கலந்துகொண்டனர்.

கோவிலை திறக்க முடிவு

இதில் சுமூகமான முறையில் கோவிலை திறந்து வழிபடலாம் எனவும், கோவில் நிர்வாகம் முந்தைய நிலைமையிலேயே செயல்பட வேண்டும் எனவும், திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் ஒன்றாக செயல்பட்டு திருவாரூர் கோட்டாட்சியர், குடவாசல் தாசில்தார், போலீசார் அனுமதி பெற்று நடத்தி கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டதால் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

இதில் துணை தாசில்தார் ஆராமுதன், திருவீழிமிழலை வருவாய் ஆய்வாளர் செல்வி, கூந்தலூர் ஊராட்சி தலைவர் ஜெயா இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story