வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
ெநல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருஷ்ணகுமார், தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், ''அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாகதான் உள்ளது. இது மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. ராதாபுரம் கால்வாயில் கடந்த 16-ந்தேதி முதல் 150 கன அடி தண்ணீர் விவசாயத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்ய வேண்டும்.
பிசான பருவத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் 62 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 31 ஆயிரத்து 429 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கான தொகை ரூ.67 கோடியே 74 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.
வறட்சி மாவட்டமாக...
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், ''காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் இடங்களில் வறட்சியாகவும், வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தற்போது காலம் மாறி மழை பொழிந்தது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் மழை இல்லை. இதனால் விவசாயிகளின் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மான்கள் அட்டகாசம்
தொடர்ந்து மானூர் கானார்பட்டியைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஆபிரகாம் பேசுகையில், ''நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் மான்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை பிடிப்பதற்காக பல ஆண்டுகளாக குழு அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னும் எந்த குழுவும் அமைக்கவில்லை'' என்றார்.
அப்போது கலெக்டர் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் உரிமையைத்தான் கேட்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு வேலை செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் எதிரிகள் அல்ல'' என்றார்.
வண்டல் மண்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், ''குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி வருகின்ற நிலையில் இதில் பல முறைகேடுகள் நடைபெறுகிறது. குளங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பல அடி ஆழம் தோண்டப்படுகிறது. இதனால் குளங்களின் கரைகளும் சேதம் அடைந்து வருகிறது. இங்கிருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் செங்கல்சூளைகளுக்கு வியாபார நோக்கில் பலர் பயன்படுத்துகிறார்கள். எனவே அந்தந்த பகுதி விவசாயிகளின் பிரதிநிதிகளை கொண்டு குழு அமைத்து குளங்களில் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து பரிசிலீக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.