நொய்யலை அழகுபடுத்தும் திட்ட ஆலோசனை
நொய்யலை அழகுபடுத்தும் திட்ட ஆலோசனை
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் நொய்யல் ஆற்றை அழகுபடுத்தும் திட்டம் ஸ்மார் சிட்டி திட்டத்தில் திட்டமிட்டு அதற்காக நொய்யல் ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைத்து சாலைகள் அமைக்கப்பட்டது. மக்களை கவரும் வகையிலும், மாநகரை அழகுபடுத்தும் வகையிலும் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழும் விளையாட்டு உபகரணங்கள் கொண்ட இடமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் நிறுவனத்தினரிடம் திட்ட வடிவமைப்பு பெறப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினர் பங்களிப்புடன் நொய்யல் அழகுபடுத்தும் திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்கனவே கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பினர், தன்னார்வலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பொழுதுபோக்கு அம்சங்கள், அழகுபடுத்தும் பணிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, அவற்றை தன்னார்வலர்கள் பங்களிப்போடு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி இறுதி செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுபோல் மாநகரில் முக்கிய சாலைகளின் நடுவே மையத்தடுப்பு, ரவுண்டானாக்கள் அமைத்து அழகுபடுத்தும் பணியை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.