சுற்றி திரிந்த மான், நாய் கடித்து பலி


சுற்றி திரிந்த மான், நாய் கடித்து பலி
x

நெல்லை மேலப்பாளையத்தில் சுற்றி திரிந்த மான், நாய் கடித்து பலியானது.

திருநெல்வேலி

நெல்லை -மதுரை 4 வழிச்சாலையையொட்டி கங்கைகொண்டானில் புள்ளி மான் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புள்ளி மான்கள் காணப்படுகிறது. அங்குள்ள சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதால் மான்கள் வெளியேறி சுற்றித்திரிகின்றன. அபிஷேகப்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், பழைய பேட்டை, சீதபற்பநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மான்கள் சுற்றி வருவதும், வாகனத்தில் அடிபட்டு உயிர் இழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் முதன் முறையாக மேலப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 1½ வயது மான் சுற்றி திரிந்தது.

அதை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அந்த மானை மீட்பதற்காக வனத்துறையினர் நேற்று தேடுல் பணியில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் கால்நடை சந்தை, பெண்கள் கல்லூரி ரோடு மற்றும் புதர் பகுதியில் சுற்றி திரிவதை அறிந்தனர். மானை பிடிக்க வலை விரித்த போதிலும் சிக்காமல் தப்பி ஓடி புதருக்குள் மறைந்தது. மாலையில் இருள் சூழ்ந்ததால் வனத்துறையினர் மானை தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தினர்.

நேற்று காலை மீண்டும் மானை தேடும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு எதிரே தெரு நாய்கள் கடித்து மான் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த மான் மேலப்பாளையம் பகுதிக்கு எப்படி வந்தது? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story