வாகனம் மோதி மான் சாவு


வாகனம் மோதி மான் சாவு
x
திருப்பூர்


காங்கயத்தில் தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூர் மலையில் மான், காட்டுப்பன்றி, குரங்கு, உடும்பு, கீரி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. மழைக்காலத்திற்கு பின்னால் மலைக்காடுகளில் போதிய புற்கள், தண்ணீர் வசதி இருப்பதால் வனவிலங்குகள் மலையை விட்டு கீழே வருவதில்லை. ஆனால் வெயில் காலங்களில் வறட்சி காரணமாக மான்கள், குரங்குகள் உள்ளிட்டவை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மலையிலிருந்து கீழே வந்த 2½ வயதுள்ள பெண் புள்ளிமான் ஒன்று ஊதியூர்-குண்டடம் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற வாகனம் மான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மான் சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக செத்தது. இதுபற்றி வனக்குழு தலைவர் கிருஷ்ணகுமார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். காங்கயம் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று செத்துக்கிடந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊதியூர் அருகே உள்ள பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.மேலும் வனத்துறையினர் வறட்சியான காலங்களில் மலைப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story