கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பாலங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பாலங்களில் சீராக செல்ல முடியாததால் வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் நீண்ட தொலைதூரம் வாகனங்கள் வரிசையாக நின்று செல்லும் நிலை உள்ளது.
கூடலூர்
கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பாலங்களில் சீராக செல்ல முடியாததால் வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் நீண்ட தொலைதூரம் வாகனங்கள் வரிசையாக நின்று செல்லும் நிலை உள்ளது.
பழுதடைந்த பாலங்கள்
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நீலகிரியில் சீசன் முடிவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை அல்லது மைசூருக்கு செல்வதற்கு கூடலூர் வழியாக வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஊட்டி தலை குந்தாவில் இருந்து கல்லட்டி, மசினகுடி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வந்ததால் அந்த வழியாக வாகனங்களை இயக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அனைத்து வாகனங்களும் கூடலூர் வழியாக இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கார்குடி பகுதியில் 2 பழுதடைந்த பாலங்களை புதியதாக கட்ட தேசிய நெடுஞ்சாலை துறையால் டெண்டர் விடப்பட்டது.
வாகன நெருக்கடி அதிகரிப்பு
ஆனால் இதுவரை பாலம் கட்டுமான பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த பாலத்தில் வாகனங்களும் சீராக செல்ல முடிய வில்லை. இதனால் கார்குடி பகுதியில் பல கி. மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலாப் பயணிகள், மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள், தமிழக, கர்நாடகா, கேரளா, அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள். வாகனங்கள் வெகு நேரம் நிற்பதால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி ஓய்வெடுப்பது வெளியில் நிற்பது என வனவிலங்குகளின் ஆபத்தை உணராமல் இது போன்ற செயல் செய்து வருவதால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
பாலங்கள் கட்ட வேண்டும்
இதனால் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். கார்குடி பகுதியில் டெண்டர் விடப்பட்ட 2 பாலங்களை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.