பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்
ஒரத்தநாடு அருகே பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டிதர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரத்தநாடு அருகே பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டிதர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ஒரத்தநாடு ஒன்றியம் பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கட்டுமானம் பழுதடைந்த காரணத்தால் கடந்த 2012- 13-ம் ஆண்டில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு- சீரமைப்பு திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கும் தூண்கள் பழுதடைந்துள்ளது. தொட்டியில் மேல் கட்டுமானங்கள் சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபத்தான நிலையில் உள்ளது.
புதிதாக கட்டித்தர வேண்டும்
இதன் காரணமாக இங்கு வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதனை கவனத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு போர்க்கால அடிப்படையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.