நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றுபவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்-டி.ராஜா பேட்டி
நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றுபவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
திருச்சி:
திருச்சியில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அக்டோபரில் நடைபெற உள்ளது. தற்போது பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் கூட்டு, இந்தியாவின் அரசியல் சட்டத்தையே திருத்தி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. முகமதுநபியை பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த செய்தி தொடர்பாளர்கள் விமர்சித்தது உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இந்திய நாடு ஒரு குடியரசாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூட்டணியை முறியடிக்க வேண்டும். தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து இருப்பதை காட்டுகிறது. தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. ஜனாதிபதியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
அரசியல் சாசனத்தை உயர்த்தி பிடிக்கக்கூடிய, ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய, இந்தியாவின் ஒற்றுமையை காப்பாற்றுகிற நேர்மையானவரே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது. ஆனால் பா.ஜ.க. தனக்கு பெரும்பான்மையான பலம் இருப்பதால் அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைத்து விடலாம் என நினைக்கிறது.
இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள மாநில கட்சிகள் ஒன்றுபட்டால் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது கேள்விக்குறியாகிவிடும். பா.ஜ.க. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆதீனங்கள் தாமாக முன்வந்து வரவு-செலவு கணக்கை கொடுக்க வேண்டும். இந்தியாவில் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும். மதத்தின் பெயரால் மக்கள் இடையே விரோதம், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடாது. சாதி, மதபேதம் இல்லாத புதிய சமுதாயம் உருவாக்க கொள்கை ரீதியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.