தள்ளிப்போகும் விதைப்பு பணி
தள்ளிப்போகும் விதைப்பு பணி
கிணத்துக்கடவு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் விதைப்பு பணி தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பருவமழை இல்லை
கிணத்துக்கடவு பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாத ஆரம்பத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு ஜூலை மாத 2-வது வாரத்தை கடந்தும், இன்னும் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதற்கிடையில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து கிணத்துக்கடவு ஒன்றிய பகுதியில் உள்ள தடுப்பணைகளை சீரமைத்து தயாராக வைத்து இருந்தனர். ஆனால் கடந்த வாரம் 4 நாட்கள் சாரல் மழை மட்டுமே பெய்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை.
விதைக்கும் பணி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு பகுதியில் மழை இன்றி வெயில்தான் வாட்டி வருகிறது. சில நேரங்களில் மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசும் காலநிலை காணப்படுகிறது. இதனால் பல்வேறு கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறோம்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் இந்த ஆண்டு மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் பயிர்களை விதைக்கும் பணி தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிணறுகளில் உள்ள தண்ணீரும் வற்றி போகும் நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.