இயங்காத தொழிற்சாலைகள் உற்பத்தி மேற்கொள்ள அனுமதி பெற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்காமல் இருக்கும் தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விஷவாயு தாக்கி பலி
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் இயங்காத தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பல மாதங்களாக சேமிக்கப்பட்ட தோல் கழிவு நீர் தொட்டியிலிருந்து கழிவு நீர் அகற்றும் பணியில் 4 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விஷ வாயு தாக்கி ஒருவர் இறந்தார். 3 பேர் பாதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் முன் அறிவிப்பு எதுவுமின்றி முறையான பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படாமலும், பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகள் கடைபிடிக்காமலும் மற்றும் முறையான மேற்பார்வை இல்லாமலும் பணிகள் மேற்கொண்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளன.
அனுமதி பெற வேண்டும்
எனவே இனிவருகாலங்களில் இது போன்ற விபத்துகள் நடைபெறாவண்ணம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல மாதங்களாக இயங்காமல் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும், உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பணியை தொடங்குவதற்கு முன் தொழிற்சாலையின் நிர்வாகத்தினர், மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மாவட்ட கலெக்டர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், காவல் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்த பின் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பணியை தொடங்க வேண்டும்.
அவ்வாறு தொழிற்சாலையில் மேற்கண்ட பணியை மேற்கொள்ள எந்தவொரு அறிவிப்புமின்றி பணி செய்ய நேர்ந்தால் கலெக்டரின் ஆணைப்படி தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.