பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 145 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 145 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 2017-ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்து பயிற்சி மருத்துவர் பணியை 145 மாணவ- மாணவிகள் இந்த ஆண்டு முடித்து இருந்தனர். அவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுரேஷ் துரை, கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், துணை கண்காணிப்பாளர் கந்தசாமி என்ற குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 12 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், "பல சோதனைகளை கடந்து சாதனை படைத்து இன்று மகுடம் சூட்டி உள்ளீர்கள். மருத்துவ பணி என்பது சிறந்த சேவை. மக்களுக்கு அனைவரும் சிறந்த முறையில் சேவை செய்ய எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்னாள் தோல் சிகிச்சை பிரிவு டாக்டர் மகாகிருஷ்ணன், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் ராஜூ, டாக்டர் வேலு, மருத்துவக்கல்லூரி முன்னாள் மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் கண்ணன், பொது அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் அலெக்ஸ் ஆர்தர் எட்வர்டு மற்றும் மருத்துவக்கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
145 மாணவ- மாணவிகளுக்கு பட்டம்






