249 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
249 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
கோவை
கோவை இ.எஸ்.ஐ., அரசு மருத்துவ கல்லூரிகளில் நடந்த விழாவில், 249 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி 101 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் டாக்டர்கள் பங்கேற்ற மாநாட்டின்போது கொரோனாவுக்கு பிறகு தற்போது குறைந்த வயதுடையவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு வருவது தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனமும் இதை அங்கீகரித்து உள்ளது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் உள்ள துணை சுகாதாரநிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதய பாதிப்புகளை சரிசெய்வதற்காக 14 மாத்திரைகள் அடங்கிய கூட்டு மருந்து திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் கோவையில் தான் முதல்முறையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
எனவே இதய பாதிப்புகள் சிறிய அளவில் இருக்கும்போதே உடனே ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு சென்றால் அங்கு உள்ள நர்சுகள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் தொடர்புகொண்டு தேவையான சிகிச்சையை கூட்டு மருந்து திட்டத்தின் கீழ் அளிப்பார்கள்.
மருத்துவத்துறை கட்டமைப்பு
பட்டம் பெறும் மருத்துவர்கள் 10 முதல் 20 ஆண்டுகளில் மிகச்சிறந்த மருத்துவர்களாக ஆகும்பட்சத்தில் மாரடைப்பு சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும்போது இதயம் பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கிய நாளில் தான் நான் மருத்துவராக பட்டம் பெற்றேன் என்பதை நினைவு கூறத்தக்கதாக அமையும். தமிழ்நாட்டில் மருத்துவ துறையின் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய அளவிலான பேரிடராக கொரோனா அச்சுறுத்தியது. பல்வேறு வகைகளில் உருமாறிய கொரோனா தாக்கிய நோயாளிகளை பாதுகாப்பதில் மிகச்சிறப்பான மருத்துவ சேவையை மாணவர்களாகிய நீங்கள் செய்து உள்ளீர்கள். எதிர்காலத்தில் எத்தனை பேரிடர் காலம் வந்தாலும் அதை திறம்பட சமாளித்து வெற்றிபெறுவீர்கள்.
4 ஆயிரம் பணியிடங்கள்
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் முதல்-அமைச்சர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் முதல்-அமைச்சர் அளித்த பேட்டியில், நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூற மட்டுமின்றி மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் தான் அங்கு சென்று வந்தேன் என்று கூறினார்.அந்த அளவுக்கு மருத்துவ துறையின் கட்டமைப்பு பொிய அளவில் மேம்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 4 ஆயிரம் மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இ.எஸ்.ஐ. டீன் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவகல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 148 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் டீன் நிர்மலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.