நெல்லை பல்கலைக்கழகத்தில் 43 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம்; கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்


நெல்லை பல்கலைக்கழகத்தில் 43 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம்; கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்
x
தினத்தந்தி 19 July 2023 1:28 AM IST (Updated: 19 July 2023 12:55 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 43 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. அரங்கில் நடைபெற்றது. துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்றார். தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்ற 105 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள், ஆராய்ச்சி படிப்பில் தேர்ச்சி பெற்ற 948 பேருக்கு டாக்டர் பட்டங்கள் என மொத்தம் 1,053 பேருக்கு விழா மேடையிலேயே பட்டங்களை வழங்கினார்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தனியார் கல்லூரி மாணவி முகமது நுர் அஸ்மாவுக்கு இரட்டை தங்கப் பதக்கங்களையும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஜாஹ்ராவுக்கு 2 தங்கப்பதக்கங்களையும் கவர்னர் வழங்கினார். இதுதவிர பல்கலைக்கழக வளாகம், கல்லூரிகள், தொலைதூர கல்வியியல், தன்னாட்சி கல்லூரிகளிலும் படித்து முடித்துள்ள மாணவ-மாணவிகள் 42,808 பேருக்கு பட்டங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார். எனவே, ஆக மொத்தம் நேற்று 43,861 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பிபேக் டெப்ராய் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். தமிழகத்திற்கு பலமுறை வந்திருந்த போதிலும் இந்த பகுதிக்கு முதன் முதலாக வந்திருக்கிறேன். இன்று பட்டம் பெற்று வெளிஉலகத்திற்கு செல்லும் உங்களுடைய எண்ணங்கள் வித்தியாசமானதாக இருக்கிறது. 1883-ம் ஆண்டு மேற்குவங்கம் கொல்கத்தா பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருந்தது. அந்த பல்கலைக்கழகத்தில் காதம்பரி கங்குலி சந்திர போஸ் என்ற பெண் பட்டம் பெற்றபோது, ஆங்கிலேயே ஆட்சி எல்லைக்குட்பட்ட ஆசிய பகுதியில் முதல் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

இந்தியாவில் நாலந்தா, தட்சசீலம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் இருந்தன. இந்த பல்கலைக்கழகங்கள் மேற்கத்திய பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன. தற்போது நடைபெறும் பட்டமளிப்பு விழா போன்று அந்த காலத்திலேயே விழாக்கள் நடைபெற்று உள்ளன.

பட்டம் பெற்றிருக்கும் நீங்கள் எப்போதும் ஆர்வத்தை கைவிடக்கூடாது. உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்கள் உணர வேண்டும். இந்தியாவின் இளைய தலைமுறையான நீங்கள் வருகிற 2047-ம் ஆண்டு அதாவது சுதந்திர இந்தியாவில் 100-வது ஆண்டில் இந்திய திருநாட்டை ஒரு வளம் பொருந்திய நாடாக கட்டமைக்க, மேம்படுத்த வேண்டும். இந்தியர் என்பதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் மிகப்பிரகாசமாக உள்ளது.

சுவாமி விவேகானந்தருக்கு பெருமை மிக்கது கன்னியாகுமரி. நவீன இந்தியா குறித்து அவர் கனவு கண்டு இருக்கிறார். அவர் எழுதி இருப்பதை நீங்கள் படிக்க வேண்டும். புதிய இந்தியாவை நீங்கள் கட்டமைக்க வேண்டும். இங்கு பட்டம் பெற்று வெளியே செல்லும் நீங்கள் இந்த தேசத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டும். அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக தேர்வாணையர் அண்ணாத்துரை, எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், நயினார் நாகேந்திரன் மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பல்கலைக்கழக துறை தலைவர்கள், பல்வேறு கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பதிவாளர் சாக்ரட்டீஸ் நன்றி கூறினார். முன்னதாக பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.


Next Story