சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம்


சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம்
x

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் ஏற்படுவதாக இல்லத்தரசிகள் ஆதங்கம்.

ராணிப்பேட்டை

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு வினியோகிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் ரூ.24 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்து உள்ளது.

தவிப்பு

சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில இடங்களில் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக திருவான்மியூர் பகுதியில் முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கியாஸ் அலுவலகங்களுக்கே சென்று காலி சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டர் கேட்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள்.

கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தன. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

10 நாட்களாகிறது

திருப்பத்தூரை சேர்ந்த இல்லத்தரசி டி.கே.எம். அனிதா:- தற்போது கியாஸ் சிலிண்டருக்கு பதிவு செய்தால் குறைந்தபட்சம் 10 நாட்களாகிறது. கியாஸ் ஏஜென்சி நடத்துபவர்கள் எண்ணெய் கம்பெனிகளுக்கு சரியான முறையில் பணம் செலுத்தாததால் சிலிண்டர் வருவதில் தாமதம் ஆகிறது. மேலும் சிலிண்டர் அனுப்புவதிலும் தாமதமாகுவதாகவும் கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் சிலிண்டர்களை வாங்க பொதுமக்கள் விரும்புவதில்லை. மத்திய அரசு தனியார் சிலிண்டர் கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான சிலிண்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். சிலிண்டருக்கு மாற்றாக மின்சார அடுப்புக்களுக்கு அரசு மானியம் அறிவித்து அதனை ஊக்குவிக்க வேண்டும்.

ராணிப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி ஜி.லதா:- முன்பு சிலிண்டர் பதிவு செய்த ஓரிரு நாட்களில் வந்துவிடும். தற்போது சிலிண்டர் வருவதற்கு ஆறு அல்லது ஏழு நாட்கள் ஆகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டால் நலமாக இருக்கும்.

விலை அதிகரிப்பு

அரக்கோணம் பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி உஷா:- அரக்கோணம் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு இன்டேன் சிலிண்டர் பதிவு செய்யும்போது அடுத்த சில நாட்களில் சிலிண்டர் கிடைக்கும் என மெசேஜ் வருகிறது. ஆனால் குறைந்த பட்சம் 15 நாட்களானாலும் சிலிண்டர் வருவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டால் இன்று வரும், நாளை வரும் என்று கூறுகின்றனர். மேலும், ஏஜென்சியில் இருந்து ஐ. வி.ஆர்.எஸ்-ல் பதிவு செய்யப்பட்ட செல் போன் எண் மற்றும் டெலிவரி பில் ஆகியவற்றை நீக்கி உங்கள் வாடிக்கையாளர் சேவை மற்றொரு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு சென்று வாங்கி கொள்ளுங்கள் என கூறுகின்றனர். அவர்கள் சொன்ன ஏஜென்சிக்கு சென்று கேட்டால் அது போல் ஏதும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏஜென்சிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியா அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுக்கு வர வேண்டும்.

வாணாபுரம் அருகே உள்ள பா.உ.சா. நகரை சேர்ந்த காந்தா:- நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். கியாஸ் சிலிண்டர் பதிவு செய்து 3 நாட்களுக்கு பிறகுதான் வருகிறது. சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைவது கிடையாது. இதனால் என்னை போல் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்படுவது மட்டுமல்லாமல் மற்ற செலவுகள் செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டி உள்ளது. சிலிண்டர்களை பதிவு செய்தவுடன் உடனடியாக கிடைப்பது மட்டுமல்லாமல் சிலிண்டரின் விலையை குறைத்து பொதுமக்களுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும்.

தட்டுப்பாடு இல்லை

ஆரணியை சேர்ந்த இல்லத்தரசி யாமினி பாபு:- சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் பில்லுக்கு உண்டான தொகையை விட கூடுதலாகத் தான் கியாஸ் சிலிண்டர் போடும் நபர்கள் பெற்றுச் செல்கிறார்கள். மேலும் ஆரணியை பொருத்தவரை அதிகப்படியான சமையல் கியாஸ் ஏஜென்சிகள் இருப்பதால் பதிவு செய்த அன்றோ அல்லது மறுநாளோ கிடைத்துவிடும். தட்டுப்பாடு என்ற பிரச்சினை இல்லை. விலை ஏற்றம் ஒருபுறம் இருக்க, அதை சப்ளை செய்யும்போது மேலும் கூடுதலாக சுமார் 40 ரூபாய் வரை செலவாகிறது.

குடியாத்தம், வள்ளலார் நகரை சேர்ந்த சு.சிவகாமிராமரத்தினம்:- சமையல் கியாஸ் சிலிண்டர், தற்போது தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. அதே நேரத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை 700 ரூபாயாக இருந்தபோது 300 ரூபாய் மானியமாக கிடைத்தது. அதுபோல், விலை ஏற்றத்திற்கு உரிய மானியம் தற்போது வழங்கப்படுவதில்லை. வெறும் 31 ரூபாய் மட்டுமே மானியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதை விலை உயர்வுக்கு ஏற்ப, உயர்த்தித் தரவேண்டும்.

அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஏ.டி.கண்ணன்:- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பதிவு செய்தால் இரண்டு நாள் கழித்து வினியோகம் செய்கிறார்கள். மேலும் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் எங்கள் பகுதியில் பல பேருக்கு இதுவரை கிடைக்கவில்லை. மானியத்தை அதிகரிக்கவேண்டும். சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் வங்கி மூலமாக வருவது பற்றி செல்போனில் எந்தவித தகவலும் வருவதில்லை. ஒருசில கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டருக்கு பதிவு செய்தால் மறுநாளே வினியோகம் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story