ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை திறப்பதில் காலதாமதம்


ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை திறப்பதில் காலதாமதம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

முன்பதிவு மையம்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்செந்தூர், திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் டிக்கெட் முன்பதிவு மையம், தட்கல் டிக்கெட் எடுக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் ரெயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் எடுத்து செல்கின்றனர்.

இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் எடுக்கும் மையங்கள் தாமதமாக திறக்கப்படுவதாக தெரிகிறது. நேற்று காலை சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக திறந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக தட்கல் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.

டிக்கெட் கிடைக்கவில்லை

இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:- பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இன்று (நேற்று) காலை 8 மணிக்கு திறக்க வேண்டிய டிக்கெட் முன்பதிவு மையம் 8.45 மணிக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தட்கல் டிக்கெட் எடுக்கும் மையம் காலை 10 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு திறக்கப்பட்டு உள்ளது. தட்கல் டிக்கெட் காலை 10 மணிக்கு சரியாக எடுக்கவில்லை என்றால் கிடைக்காது. இதனால் பொதுமக்கள் தட்கல் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி சென்றனர். மேலும் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து கேட்டதற்கு பாலக்காட்டில் இருந்து வருவதற்கு தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தென்னக ரெயில்வே பொது மேலாளர், பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு இ-மெயில் மூலமாகவும், ரெயில்வே இணையதளத்திலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story