சாக்குகள் இல்லாததால் நெல்மணிகளை எடை போடுவதில் தாமதம்
சாக்குகள் இல்லாததால் நெல்மணிகளை எடை போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முசிறி:
முசிறியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் நெல்மணிகளை, விவசாயிகள் முசிறியில் தா.பேட்டை ரோட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது அந்த நிலையத்தில் இருந்தவர்கள், நெல்மணிகளை காய வைத்து கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நெல்மணிகளை அருகே இருந்த களத்தில் கொட்டி, 2 நாட்களாக விவசாயிகள் காய வைத்துள்ளனர். அதன்பின்னரும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கேட்டபோது, கொள்முதல் செய்வதற்கு உரிய சாக்குகள் இங்கே இல்லை. இருக்கின்ற 500 சாக்குகளும் ஓட்டையாகவும், தரமற்றதாகவும் உள்ளது. எனவே சாக்குகள் வந்த பிறகு தான் எடை போட்டு, கொள்முதல் செய்ய முடியும் என்று பணியாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெல் மேலும் காய்ந்து விடுவதால் சாக்கில் நிரப்பும்போது எடையும் குறைந்துவிடும். இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, தாமதமின்றி நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.