கல்லணை கால்வாயில் தாமதமாக நடக்கும் கிளை வாய்க்கால் கட்டுமான பணி


கல்லணை கால்வாயில் தாமதமாக நடக்கும் கிளை வாய்க்கால் கட்டுமான பணி
x

பூதலூர் அருகே கல்லணை கால்வாயில் தாமதமாக கிளை வாய்க்கால் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே கல்லணை கால்வாயில் தாமதமாக கிளை வாய்க்கால் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கல்லணை கால்வாய்

கல்லணையில் கல்லணையிலிருந்து பிரிந்து தஞ்சை, திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களில் பாசன வசதிகளை அளிப்பது கல்லணை கால்வாய்.

இந்த கல்லணை கால்வாய் கடைமடை வரை சீரான தண்ணீர் செல்வதற்கு ஏதுவாகவும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைந்து ஓடி வயல்களில் பாய்வதற்கு ஏதுவாகவும் தலைப்பு முதல் கடைமடை வரை சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதகுகள் இடிக்கப்பட்டது.

கால்வாய் உருவாக்கப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட கிளை வாய்க்கால் தலை மதகுகள் இடித்து அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இதே போலவே பூதலூர் ஒன்றியம் கடம்பங்குடி கிராமத்தின் அருகில் கல்லணை கால்வாயில் கிளை வாய்க்கால் மதகு புதிதாக அமைக்கப்பட்டு இரும்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தலைப்பில் இருந்து 20 மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் மூலம் கால்வாய் அமைத்து பாசனத்திற்கு பயன் தரும் பணிகள் இன்னும் முடியவில்லை.

நேற்றைய நிலவரப்படி கால்வாய் அமைக்க இருபுறம் தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கான்கிரீட் கொண்டு கால்வாய் அமைத்து குறுக்கிடும் மற்றும் ஒரு வாய்க்கால் தண்ணீர் இதில் கலக்காமல் தவிர்க்க சிறிய கீழ் பாலம் அமைக்க வேண்டும்.

கட்டுமான பணிகள் முடியவில்லை

கிளை வாய்க்கால் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கால்வாய் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் குறுவை நாற்று போட இயலாமல், வயலில் தண்ணீர் பாய்ச்சி தயார் செய்ய முடியாமல் கவலையில் உள்ளனர்.

நீர்வளஆதார துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்து கிளை வாய்க்கால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story