பராமரிப்பு இல்லாத நகராட்சி வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

உடுமலையில் பராமரிப்பு இல்லாத நகராட்சி வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடுமலையில் பராமரிப்பு இல்லாத நகராட்சி வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வணிக வளாக கடைகள்
உடுமலை நகராட்சிக்கு வருமானம் ஈட்டி தருகின்ற காரணிகளில் வணிக வளாக கடைகளும் அடங்கும். ராஜேந்திரா மற்றும் பழனி ரோடு, மத்திய பஸ் நிலைய வெளிப்புறம் மற்றும் உட்புறக்கடைகள், சத்திரம் வீதி, குட்டை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் மூலம் நிலையான வருமானம் நகராட்சிக்கு வந்து கொண்டு உள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் கடைகள் எடுத்த பல்வேறு தரப்பினர் அந்த கடைகளில் ஜெராக்ஸ், டைப்ரைட்டிங், கோழிக்கடை, தேனீர் மற்றும் உணவகங்கள், செல்போன் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் இந்த கடைகளில் நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்வதற்கு அக்கறை காட்டுவதில்லை.
பாதுகாப்பற்ற சூழல்
இதனால் அதன் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சிலாப்புகள் வலுவிழந்து கான்கிரீட் கலவை மற்றும் கம்பிகளுடன் கீழே விழுந்து வருகிறது. இதனால் பல்வேறு பணிக்களுக்காக செல்கின்ற பொதுமக்களுக்கும் கடையில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
போக்குவரத்தும் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கமும் இல்லாத முந்தைய காலகட்டத்தில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நகரின் முக்கிய பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வணிக வளாகக்கடைகள் கட்டப்பட்டது.
அதன் மூலம் பல்வேறு தொழில்கள் நடைபெற்று வந்ததால் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர்.
இந்த சூழலில் கடைகள் கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் அவற்றில் முறையான பராமரிப்பு பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் கட்டிடங்களின் மேற்கூரைகள் கம்பிகளுடன் பெயர்ந்து கான்கிரீட் கலவையுடன் கீழே விழுந்து வருகிறது. இதனால் கடைகளுக்கு செல்லும் பொதுமக்களும் பணியாற்றும் பணியாளர்களும் அச்சம் அடைகின்றனர்.
ஏலம் போகாத கடைகள்
இதனால் அச்சம் அடைந்த ஒரு சிலர் கடைகளை ஏலம் எடுப்பதற்கு முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில கடைகள் இன்னமும் ஏலம் விடப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது. கடைகளில் வருகின்ற வருமானத்தை பெறுவதில் முனைப்பு காட்டும் நகராட்சி நிர்வாகம் அதனை குறிப்பிட்ட இடைவெளியில் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
எனவே உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






