"அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாகுபாடின்றி நலத்திட்டங்கள்"; சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாகுபாடின்றி நலத்திட்டங்கள்; சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாகுபாடின்றி அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்று அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

தேனி மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம், கம்பத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் லட்சுமிவாசன் தலைமை தாங்கினார். பொருளாளர் சரவணன், செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச சீருடை, சைக்கிள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட 14 வகை விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது.

இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி என்று வேறுபாடு பார்க்க கூடாது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் அரசாணை எண்-165ஐ முற்றிலுமாக நீக்கவேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றி நியமனம் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சிறுபான்மை பள்ளி, சிறுபான்மை அல்லாத பள்ளி என வேறுபாடு காட்டாமல் அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளி செயலர் பிரபாகர், கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி செயலர் ராம்பா, இசட்.கே.எம். பள்ளி செயலர் சுப்பிரமணியம், ராமகிருஷ்ணா வித்யாலயா தொடக்கப்பள்ளி செயலர் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story