பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை


பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை
x

பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு சிப்பத்திற்கு ரூ.35 என விவசாயிகளிடம் கட்டாய வசூல் நடைபெறுகிறது. அதை ஆய்வு செய்து ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து, பாசன வாய்க்கால்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். அல்ட்ராடெக் சிமெண்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கோர்ட்டு உத்தரவிட்டும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை. வாழ்க்கை கிராமத்திற்கும், தூத்தூர் கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும், என்றார்.

வெள்ளாற்றில் மணல்...

விவசாயி விஸ்வநாதன் பேசுகையில், பொன்னேரியை தூர்வார வேண்டும். ராஜேந்திர சோழனுக்கு மாவட்டத்தில் 50 அடி உயர சிலை வைக்க வேண்டும். வெள்ளாற்றில் அனுமதி பெறாத இடத்திலும் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்துள்ளனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, நிலத்தடி நீரை காக்க வேண்டும். மராட்டிய அரசு விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு விளை பொருட்களை வாங்கி, பற்றாக்குறை காலங்களில் விற்பனை செய்வதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும், என்றார்.

விவசாயி செந்தில்குமார் பேசுகையில், விளாங்குடி அருகே தமிழக அரசு குடோனுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். தேளூர் மற்றும் விளாங்குடி பெரிய ஏரிகளை பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். பழுதாகி உள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். அரியலூரில் செட்டி ஏரியை தூர்வாரி, பூங்காவை சீரமைக்க வேண்டும், என்றார்.

ஆய்வு செய்ய வேண்டும்

விவசாயி விஜயகுமார் பேசுகையில், தனியார் உரக்கடைகளில் விற்கப்படும் மக்காச்சோள விதைகளை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மருதையாற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், என்றார். கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் விவசாயிகளின் மனு மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story