மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர கோரிக்கை
மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
குட்டதட்டி, செண்பகத்தோப்பு வட்டார விவசாயிகள், சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராமச்சந்திர ராஜா சமரசம் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் தாலுகாக்களில் 3ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி நடைபெறுகிறது. இந்தநிலையில் மாமரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் பருவநிலை மாற்றம் காரணமாக உதிர்ந்து விட்டன. மாங்காய் பறிக்கப்பட வேண்டிய நிலையில் இந்நிலை ஏற்பட்டதால் சிறு, குறு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் பருத்தி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். பிற மாவட்டங்களில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் உரிய வழிகாட்டுதலால் பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து இழப்பீடு பெற்று தர வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.