காட்டு நாயக்கன் சமூக மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
காட்டு நாயக்கன் சமூக மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க த.மா.கா. கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.கனி என்ற மாரிமுத்து அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள். தற்போது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். உயர் கல்வி படிப்பில் சேர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். உயர் கல்விக்கு மாணவ- மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், அதிகாரிகள் மனுவை நிராகரிக்கிறார்கள். இதனால் மாணவ- மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
எனவே காட்டு நாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மேற்கல்வி பயில வருவாய்த்துறை மூலம் காட்டு நாயக்கன் சான்றிதழ் வழங்குவதற்கு உத்தரவிட்டு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.