விபத்துகளை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
பெரியகுளத்தில் விபத்துகளை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ஜெ.ரபீக் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய செயலாளர் ஆண்டி, சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று பெரியகுளத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் ஜெரால்டுவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், "பெரியகுளம் தென்கரையில், வைகை அணை சாலையில் வங்கிகள், எல்.ஐ.சி. அலுவலகம் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. இந்த சாலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர் பகுதி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. எனவே வைகை அணை சாலையில் வேகத்தடை அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.