பாலாறு குடிநீர் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்த கோரிவட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பாலாறு குடிநீர் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்த கோரிவட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பாலாறு குடிநீர் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்த கோரி பெரும்பேடு கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பெரும்பேடு கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் அருகில் உள்ள பாண்டுர் ஊராட்சி பாலாற்று கரையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் அமைத்து பெரும்பேடு கிராமத்திற்கு பாலாறு குடிநீர் கொண்டுவர மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பாண்டுர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெறவிடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. இதனால் டெண்டர் விடப்பட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

நேற்று பெரும்பேடு கிராமத்திற்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க பணிகளை தொடங்க கோரி கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட வி.சி.க. செயலாளர் கனல்விழி தலைமையில் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கோமதி பெருமாள் புறக்கணித்து விட்டு கிராம மக்களுடன் சோ்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story