ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி21 கிராம மக்கள் ஊர்வலம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி 21 கிராம மக்கள் ஊர்வலம் நடத்தினர்.
தூத்துக்குடி அருகே உள்ள குமாரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி, சாமிநத்தம், சில்லாநத்தம், ராஜாவின்கோவில், மீளவிட்டான், மடத்தூர், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சோரீஸ்புரத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலை வழியாக வந்த போது, அவர்களை போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும், ஆலையில் உள்ள பசுமை வளாகத்தை பராமரிக்கவும், வேறு கழிவுகள் இருந்தால் அவைகளை அகற்றவும் அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த பணிகளை மேற்கொள்ள உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும், சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் விரைவாக திறக்க வேண்டும் என விரும்புகிறோம். எனவே, அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.