மின்சார கட்டணத்தை குறைக்க கோரி 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


மின்சார கட்டணத்தை குறைக்க கோரி  6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x

மின்சார கட்டணத்தை குறைக்க கோரி 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.

ஈரோடு

மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்திய உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கருப்புக்கொடி போராட்டம்

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ள மின்சார கட்டணத்தை குறைக்ககோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா), மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தின. இந்த அமைப்புகளுடன் இணைக்கப்பட்டு உள்ள சங்கத்தினர் முழுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தன.

கலெக்டரிடம் மனு

இதுமட்டுமின்றி தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம், துணைத்தலைவர்கள் பி.தனபாலன், பி.கே.என்.சந்திரசேகரன் உள்பட ஏராளமானவர்கள் கருப்பு பட்டை அணிந்து கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

6 ஆயிரம் தொழிற்சாலைகள்

இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது:-

சிறு-குறு நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்து துறையிலும் தொழில் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சியினால் தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு என்பது சிறு தொழில்களை நசுக்குவதாக உள்ளது. எனவே தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர (பீக் அவர்ஸ்) கட்டணம் திரும்பப்பெற வேண்டும். சோலார் மேற்கூரை ரெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். "மல்டி இயர் டேரிப்" -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சாலைகளில் கருப்புக்கொடிகள் ஏற்றி உள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழில் முனைவோர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story