முடங்கிக் கிடக்கும் எல்லை அளவீடு பணிகள்


முடங்கிக் கிடக்கும் எல்லை அளவீடு பணிகள்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே கம்பம்மெட்டு பகுதியில் முடங்கிக் கிடக்கும் எல்லை அளவீடு பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி

கம்பம்மெட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு பகுதியானது தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியாக உள்ளது. இங்கு தமிழக வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. எல்லையை குறிக்கும் எல்லைக் கற்களும் பல இடங்களில் இல்லை.

கடந்த 2017-ம் ஆண்டு கம்பம்மெட்டு பகுதியில் தமிழக எல்லையில், கேரள மாநில கலால் துறை சார்பில் சோதனை சாவடி அமைப்பதற்காக, கன்டெய்னர் இறக்கி வைக்கப்பட்டது. தமிழக வனப்பகுதியில் கன்டெய்னர் சோதனை சாவடி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் தமிழக வனத்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எல்லைக்கற்கள் அகற்றம்

இதையடுத்து தேனி, இடுக்கி மாவட்ட அதிகாரிகள் இணைந்து நில அளவீடு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நிலஅளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருமாநில அதிகாரிகளும் இணைந்து அளவீடு செய்து எல்லைக் கற்களை நட்டனர். இதையடுத்து கேரள மாநில கலால் துறை கொண்டு வந்து இறக்கிய கண்டெய்னரை அங்கிருந்து திரும்ப எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் நிலம் அளவீடு பணிகள் மேற்கொண்டு நடப்பட்ட எல்லைக்கற்களை கேரளாவை சேர்ந்த சிலர் அப்புறப்படுத்தினர். இதனால் இங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, அப்போது கேரள மந்திரியாக இருந்த எம்.எம்.மணி, எம்.பி.யாக இருந்த ஜோய்ஸ் ஜார்ஜ் மற்றும் கேரளத்தின் முக்கிய அரசியல் கட்சிக்காரர்கள் எல்லைப் பகுதியை பார்வையிட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இருமாநில எல்லையை அளவீடு செய்து மீண்டும் எல்லைக் கற்கள் நடவேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தின் பல்வேறு அமைப்பினரும், வன ஆர்வலர்களும் எழுப்பினர். அப்போதைய மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்தார்.

அமைச்சர் கருத்து

இதையடுத்து அப்போதைய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கம்பம்மெட்டு பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கம்பம்மெட்டு எல்லைப் பகுதியில் அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருமாநில அதிகாரிகள் இணைந்து கூட்டு சர்வே (நில அளவீடு) மேற்-கொள்ள தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில், வருவாய்த்துறை, நில அளவீடு துறை, போலீஸ் துறை, வனத்துறை அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. கேரள அரசு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் கூட்டு சர்வே நடத்தப்படும். எல்லைப் பகுதியை யாராலும் மாற்ற முடியாது. இதுதொடர்பான வரைபடம் தமிழக அரசிடமும் உள்ளது. கேரள அரசிடமும் உள்ளது. அவற்றை வைத்து அளவீடு செய்து, தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பாதை அமைக்கப்படும்" என்று கூறினார்.

முடங்கிய பணிகள்

அதன்பிறகு நிலம் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு இன்றுவரை ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலஅளவீடு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கிடையே கேரள அரசு டிஜிட்டல் முறையில் சர்வே எடுக்கும் பணியை மேற்கொண்டது. அப்போது தமிழக எல்லை பகுதியிலும் சர்வே நடப்பதாக கூறப்பட்டது. இதற்கு கேரள அரசு தரப்பில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், தேனி மாவட்டத்தில் அதிருப்தியே நீடிக்கிறது.

முடங்கிக் கிடக்கும் சர்வே பணியை மீண்டும் தொடங்கி ஆக்கிரமிப்பில் இருந்து தமிழக எல்லையை மீட்க வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தொடர்ந்து ஆக்கிரமிப்பு

அளவீடு பணியின் போது போராட்டம் நடத்தி கைதான தேனியை சேர்ந்த எஸ்.ஆர்.சக்கரவர்த்தி கூறுகையில், 'கடந்த 2017-ம் ஆண்டு தமிழக, கேரள மாநில அதிகாரிகள் இணைந்து அளவீடு செய்து நடப்பட்ட எல்லைக் கற்களை மர்மநபர்கள் பிடுங்கி எறிந்தனர். மீண்டும் அங்கு கற்கள் நடப்படவில்லை. இதனால், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நான் உள்பட சிலர் அங்கு சென்று பிடுங்கி வீசப்பட்ட அதே இடத்தில் கற்களை நடவு செய்தோம். அதற்காக போலீசாரால் நான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டோம். அதற்கு பிறகும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். இதுவரை அளவீடு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், தமிழக எல்லைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. எனவே தமிழக எல்லையை முழுமையாக அளவீடு செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை' என்றார்.

வனவளம் பாதிப்பு

கம்பத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தர்மேந்திரா கூறுகையில், 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் எல்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், கம்பம்மெட்டு எல்லைப் பகுதியில் போதிய அளவில் கண்காணிப்பு இல்லை. இதனால், ஆக்கிரமிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், குப்பைகள் போன்றவையும் தமிழக பகுதிக்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. ஏற்கனவே வரையறை செய்த எல்லையை அளவீடு செய்து கற்களை நடுவதில் ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை. தமிழக அரசு இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

கம்பத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜாபருல்லா கூறுகையில், 'கம்பம்மெட்டு பகுதியில் தமிழக, கேரள மாநில எல்லை எது என்று அளவீடு செய்து உறுதி செய்யப்படாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இருமாநில அரசுகளும் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அங்கு தமிழகத்துக்கு சொந்தமான இடம் வனப்பகுதியாகவும், கேரளாவுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்புகள் உள்ளிட்ட இதர பயன்பாட்டு நிலமாகவும் உள்ளது. எனவே, தமிழக நிலம் பறிபோனால், அது வன வளத்தையும் சேர்த்து பாதிக்கச் செய்யும். தமிழக வனப்பகுதியை பாதுகாக்க இந்த அளவீடு பணி அவசியம். தற்போது தமிழக, கேரள அரசுகளிடம் நல்ல நட்புறவு உள்ளது. சுமுகமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இருமாநில அரசும் இணைந்து மீண்டும் அளவீடு பணிகளை மேற்கொண்டு, இருமாநில எல்லைகளிலும் கற்கள் நடவு செய்து கண்காணிக்க வேண்டும்' என்றார்.


Related Tags :
Next Story