மார்க்கெட் கடைகளை இடிக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு


மார்க்கெட் கடைகளை இடிக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
x

பாளையங்கோட்டையில் மார்க்கெட் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பொக்லைன் எந்திரத்தின் முன் படுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் மார்க்கெட் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ெபாக்லைன் எந்திரத்தின் முன் படுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மார்க்கெட்

நெல்லை பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படுகிறது. இதையொட்டி அங்கிருந்த 538 கடைகளை காலிசெய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தப்பட்டது.இதற்காக அருகில் உள்ள பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் 178 தற்காலிக கடைகளும், பழைய போலீஸ் குடியிருப்பில் 373 தற்காலிக கடைகளும் அமைத்து கொடுக்கப்பட்டது.

இடிக்கும் பணி

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகள் வர இருந்ததால் அதுவரை காலஅவகாசம் வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடைகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் நேற்று அந்த கடைகளை இடிக்கும் பணிக்காக அதிகாரிகள் அங்கு வந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

போராட்டம்

அப்போது பாளையங்கோட்டை பகுதி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் வியாபாரிகள் அங்கு வந்து கடைகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சில வியாபாரிகள் பொக்லைன் எந்திரத்தின் முன் படுத்து உருண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கடைகளை இடிக்கக்கூடாது, என தெரிவித்தனர்.

9 பேர் கைது

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 9-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கடைகள் இடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்த சங்க கூட்டத்தில் மார்க்கெட் கடை விவகாரத்தில் மாநகராட்சி, வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் கேட்ட தற்காலிக கழிவறை வசதிகள், நடைபாதை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

ஆனால், தற்காலிக கடைகளுக்கான மின் இணைப்பினை வியாபாரிகள் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ஒரு பகுதி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story