ஆனைமலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆவின் பாலகம் இடித்து அகற்றம்
ஆனைமலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆவின் பாலகம் இடித்து அகற்றம்
ஆனைமலை
ஆனைமலை முக்கோணத்தில் சேத்துமடை -பொள்ளாச்சி ரோட்டில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி சாலையை ஆக்கிரமிப்பு செய்து ஆவின் பாலகம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, வாகன விபத்துகளும் நடந்து வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆவின் பாலகத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் அந்த சாலையில் அளவீடு செய்யப்பட்ட போது, ஆவின் பாலகம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆவின் பாலகத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் ஆவின் பாலகம் அகற்றப்படவில்லை. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் அந்த ஆவின் பாலகத்தை நேற்று இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ஆக்கிரமிப்பு ஆவின் பாலகம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
வால்பாறை
வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உருவாகுவதற்கு காரணமாக விளங்கிய கார்வர் மார்ஷ் என்ற ஆங்கிலேயருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.இந்த சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை செய்து காட்சி மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மடம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதை முன்னிட்டு கவர்க்கல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த இடத்தில் தள்ளு வண்டி கடைகள் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவு பொருட்கள், திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பலர் சாலையோரத்தில் தள்ளு வண்டி கடைகள் நடத்த தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் நாளுக்கு நாள் கடைகள் அதிகரித்து வந்தது.மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் வியாபார போட்டியும் ஏற்படத் தொடங்கியது.இதனால் அந்த பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கடைக்காரர்கள் கடையை அகற்றாமல் இருந்து வந்த நிலையில் நேற்று நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்போடு துப்புரவு பணியாளர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். கடை நடத்தியவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.