நீர்வழி புறம்போக்கில் கட்டப்பட்ட 2 வீடுகள் இடிப்பு


நீர்வழி புறம்போக்கில் கட்டப்பட்ட 2 வீடுகள் இடிப்பு
x

நீர்வழி புறம்போக்கில் கட்டப்பட்ட 2 வீடுகள் இடிக்கப்பட்டன.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 45). இருசக்கர வாகன உதிரி பாகம் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் செல்வகுமார்(42). விவசாயி. இருவரும் உறவினர்கள்.

இந்நிலையில் கலைவாணன் முன்விரோதம் காரணமாக, செல்வகுமார் ஓடை புறம்போக்கில் வீடு கட்டி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஐகோர்ட்டு விசாரித்தது. இதில், செல்வகுமார் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு ஓடை ஒத்தையடி பாதை என்று வகைப்படுத்தப்பட்ட அரசு புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதேபோல் வழக்கு தொடர்ந்த கலைவாணனும், ஓடை புறம்போக்கில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது.இதையடுத்து செல்வகுமார் மற்றும் கலைவாணன் ஆகியோர் நீர்வழி புறம்போக்கில் வீடு கட்டி உள்ளதால், அவற்றை அகற்றுமாறு வருவாய் துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.அவர்கள் இருவரும் தாங்களாகவே வீடுகளை அகற்றாததால் நேற்று கலைவாணன் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளை குன்னம் தாசில்தார் அனிதா, வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.


Next Story