பழமை வாய்ந்த 3 விநாயகர் கோவில்கள் இடிப்பு
திருவையாறு- கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்க பணி காரணமாக பழங்கால 3 விநாயகர் கோவில்கள் இடித்து அகற்றப்பட்டன.
திருவையாறு- கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்க பணி காரணமாக பழங்கால 3 விநாயகர் கோவில்கள் இடித்து அகற்றப்பட்டன.
விநாயகர் கோவில்கள்
திருவையாறு- கும்பகோணம் இடையிலான 34 கிலோமீட்டர் தொலைவு கொண்ட நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சாலையோரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளன.
அதன்படி கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிர்புறம் இருந்த விநாயகர் கோவில், மேல கபிஸ்தலம் ஊராட்சியில் இருந்த நீரூற்று விநாயகர் கோவில், கபிஸ்தலம் ஊராட்சியில் இருந்த முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட சொர்ண பிள்ளையார் கோவில் ஆகிய 3 பழமையாக வாய்ந்த கோவில்களை முதல் கட்டமாக இடித்து அப்புறப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை மூலம் நடந்து வருகிறது.
பக்தர்கள் கவலை
இதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் சாலை ஓரம் உள்ள பின்னை மரத்து பிள்ளையார் கோவில், கபிஸ்தலம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கோவில் உள்ளிட்ட 6 கோவில்கள் அகற்றப்பட உள்ளன. இந்த பழங்கால கோவில்களை அகற்றி, திருவையாறு- கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலை துறையினர் கூறினர். பழங்கால கோவில்கள் அகற்றப்பட்டு வருவதால் இந்த பகுதியில் வசிக்கும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.